வேலூர், ஏப்.2: புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள் தெரிவித்துள்ளார். வேலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்-1, 2 கோட்ட இணை இயக்குனர்கள் தங்கதுரை, சாந்தினிபிரபா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் அனைத்து பிரிவு பொது மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135பி-ன்படி தேர்தல் நாளன்று 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், கட்டிட மற்றும் இதர கட்டுமான பணிகளில் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டிட மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தேர்தல் விடுமுறை குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தங்களது புகார்களை ராணிப்பேட்டை (9842719537, 9442542795, 9976492942), திருப்பத்தூர் (9884028066, 9976492942) மற்றும் திருவண்ணாமலை (9884028066, 9788877199) ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர், கட்டிட மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் எந்தவித புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
