13 தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடி போட்டி சிட்டிங் எம்எல்ஏக்களை எதிர்கொள்வதில் அதிமுகவுக்கு கடும் சவால் வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில்

வேலூர், மார்ச் 29: ேவலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 13 தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கும். தமிழகத்தின் முக்கிய கட்சியாக உள்ள திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாக மோதிக்கொள்ளும் தொகுதிகளில் இரு கட்சியினரும் போட்டி போட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் திமுக வேட்பாளர்கள் கார்த்திகேயன்(வேலூர்), துரைமுருகன் (காட்பாடி), ஏ.பி.நந்தகுமார்(அணைக்கட்டு), ராஜேஸ்வரி கே.வி.குப்பம்(தனி) தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக குடியாத்தம்(தனி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில், எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர்), வி.ராமு(காட்பாடி), வேலழகன்(அணைக்கட்டு), குடியாத்தம்(தனி) பரிதா, கே.வி.குப்பம்(தனி) தொகுதி புரட்சி பாரதம் கட்சி ஜெகன்மூர்த்தி போட்டியில் உள்ளனர். இதில், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக களம் இறங்க உள்ளன. கே.வி.குப்பம் தொகுதியில் கூட்டணி கட்சி புரட்சி பாரதம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால், 4 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அதேபோல், அதிமுகவிலும் தேர்தல் பரப்புரை தொடங்கி உள்ளதால், வேலூர் வெயிலை விட தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் என எதிர்க்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் கவிதா (திமுக), வீரமணி(அதிமுக) ஜோலார்பேட்டை, வில்வநாதன்(திமுக), வெங்கடேசன்(அதிமுக) ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் ஆற்காடு தொகுதியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்(திமுக), எஸ்.எம்.சுகுமார்(அதிமுக) திமுக, அதிமுக நேரடியகாக களத்தில் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கீழ்பென்னாத்தூர், செங்கம் (தனி), கலசபாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 6 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன. கீழ்பென்னாத்தூரில் தற்போது எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். செங்கம் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மு.பெ.கிரியும், அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளரான எஸ்.வேலு என்பவரும் போட்டியிடுகின்றனர். அதேபோல், கலசப்பாக்கம் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பெ.சு.தி.சரவணனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தியும் போட்டியிடுகின்றனர்.

ஆரணி தொகுதியில் திமுக சார்பில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எல்.ஜெயசுதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், செய்யாறு தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஒ.ஜோதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வந்தவாசி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளரான ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை வேட்பாளரை அறிவிக்காததால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

அதேபோல், போளூர் தொகுதி திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளரான வக்கீல் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதனால், அந்தத் தொகுதியிலும் அதிமுக கூட்டணியினர் சோர்வடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே தேர்தல் களத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

பல்வேறு தேர்தல்களை எதிர்கொண்ட அனுபவம் உள்ளவர்கள். போளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சரவணன், செங்கம் அதிமுக வேட்பாளர் எஸ்.வேலு, வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி, ஆரணி திமுக வேட்பாளர் மகாலட்சுமி ஆகியோர் மட்டுமே பொது தேர்தல் களத்துக்கு புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளுக்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. மேலும், திமுக நேரடியாக போட்டியிடும் 7 தொகுதிகளில் ஆரணி தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளிலும் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையும் தங்களுடைய தொகுதிகளில் பெற்றுள்ளனர்.

Related Stories: