வேலூர், மார்ச் 29: வேலூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவினரால் தேர்தல் நடத்தை விதிகள் அமலான 11 நாட்களில் ரூ.1 கோடியே 7 லட்சத்து 59 ஆயிரத்து 510 பறிமுதல் செய்யப்பட்டு ரூ.73 லட்சத்து 34 ஆயிரத்து 10 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை கண்காணித்து பறிமுதல் ெசய்வதற்காக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தேர்தல் நடத்தை விதி அமலான 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை 11 நாட்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.93 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரொக்கப்பணம் பறிமுதல் ெசய்யப்பட்டது. ஒரே நபரிடம் ரூ.14 லட்சத்து 28 ஆயிரத்து 330 பறிமுதல் செய்யப்பட்டது. இது வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் ரூ.1 கோடியே 7 லட்சத்து 59 ஆயிரத்து 510 பணம் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.73 லட்சத்து 34 ஆயிரத்து 10 பணம் உரியவர்களிடம் திருப்பியளிக்கப்பட்டது.
அதேபோல் 11 நாட்களில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா, புகையிலை மற்றும் மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 32 மதிப்புள்ள மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் நேற்றுமுன்தினம் காட்பாடியில் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் பணமும், கே.வி.குப்பத்தில் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் பணமும், வேலூரில் ரூ.71 ஆயிரத்து 730 பணமும் என பறிமுதல் ெசய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
