பூஜை செய்வதாக தனி அறையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: கேரளாவில் பிரபல ஜோதிடர் சிறையில் அடைப்பு

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பேய் விரட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல ஜோதிடர் ராஜன் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம் கொல்லம் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பாபு (47). பிரபல ஜோதிடர். இவருக்கு முராரி தந்திரி என்ற பெயரும் உண்டு. ஜோதிடம் பார்ப்பது மட்டுமல்லாமல் மந்திரவாதமும் செய்து வந்தார். இதனால் தினமும் ஏராளமானோர் சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், 16 வயது மகளை அழைத்து கொண்டு ராஜன் பாபுவிடம் சென்றார். மகள் பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும், பிடிவாதம் பிடிப்பதாகவும், சில சமயங்களில் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வதாகவும் ராஜன் பாபுவிடம் கூறியுள்ளார்.

பேய் பிடித்திருப்பது தான் அதற்கு காரணம் என்றும், தனி அறையில் வைத்து பூஜை நடத்தினால் குணமாகிவிடும் என்றும் சிறுமியின் தாயிடம் ஜோதிடர் கூறினார். தொடர்ந்து தாயை வெளியே அமர வைத்துவிட்டு சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இது தெரியவர ஆத்திரத்தில், புத்தூர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், அறையில் வைத்து சிறுமியை ராஜன் பாபு கடுமையாக தாக்கியது தெரியவந்தது. சிறுமியின் தலை, கழுத்தில் காயங்கள் காணப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ராஜன் பாபு தலைமறைவானார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொல்லத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைதளங்களில் ராஜன் பாபுவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. சினிமா பாட்டுக்கு நடனமாடியும், நடித்தும் அடிக்கடி ரீல்சும் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: