எஸ்-400 நீண்ட தூர ஏவுகணை அமைப்பு உட்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.2.38 லட்சம் கோடியிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடுகளுடனான எல்லையோர பதற்றங்களை கருத்தில் கொண்டு தனது போர் திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன ஆயுதங்களை இந்திய ராணுவம் வாங்கி குவித்து வருகிறது.இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், ராணுவம், விமான படை மற்றும் கடலோர காவல் படைகளுக்கு தேவையான கொள்முதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு தடம் அமைப்பு, கவச ஊடுருவல் பீரங்கி தோட்டாக்கள்,தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் ஓடுபாதை சார்பற்ற வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விமானப்படைக்கு, நடுத்தர போக்குவரத்து விமானங்கள், எஸ்-400 நீண்ட தூர தரை-வான் ஏவுகணை அமைப்பு, தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கும், எஸ்யு-30 விமான இயந்திர பாகங்களைப் பழுதுபார்ப்பதற்கான முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏஎன்32 மற்றும் ஐஎல்76 போக்குவரத்து விமானங்களுக்குப் பதிலாக நடுத்தர போக்குவரத்து விமானங்களைச் சேர்ப்பது, படைகளின் மூலோபாய, தந்திரோபாய மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிவிடுகையில், ரூ.2.38 லட்சம் கோடியிலான திட்டங்களுக்கான மூலதன கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு கையெழுத்தாகியிருப்பது ஊக்கமளிக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.6.73 லட்சம் கோடியிலான 55 முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.இந்த முடிவுகள் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை கணிசமாக மேம்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

* ரூ.445 கோடி ரஷ்ய ஏவுகணை
இந்திய ராணுவத்திற்காக ரூ.445 கோடி மதிப்பில் துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொள்முதல் செய்ய ரஷ்ய நிறுவனமான ரோஸோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல் இந்திய கடற்படைக்கான பி8ஐ நீண்ட தூர கடல்சார் உளவு விமானத்தை பராமரிக்க, பழுதுபார்க்க மற்றும் முழுமையான சீரமைப்புக்காக போயிங் இந்தியா டிபென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.445 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

Related Stories: