திமுக, விசிகவின் 6 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் நிறுத்தவில்லை; வாபஸ் வாங்காதவர்கள் மீது நடவடிக்கை: கட்சி கொடியை பயன்படுத்த தடை, புதுச்சேரி மாநில தலைவர் அதிரடி

புதுச்சேரி காங். அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் திமுகவுக்கு 14 தொகுதியும், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதியும் என்று முடிவானது. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சி பிரித்துக் கொடுக்க வேண்டும். திமுக உழவர்கரை தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. மேலும், திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக-விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை.

16 தொகுதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக-5, விசிக-1 என 6 தொகுதிகளில் நாங்கள் அறிவிக்காத காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள். திமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை வேட்பு மனுவை வாபஸ் வாங்க கூறியும் அவர்கள் வாபஸ் பெறவில்லை.

மங்கலம் தொகுதியில் ரகுபதி என்பவர் வாபஸ் பெற 8 நிமிடம் காலதாமதமாக சென்றார். அதனால் அவரால் வாபஸ் பெற முடியவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு ஏ, பி படிவம் வழங்குவது வாடிக்கைதான். கட்சி தலைமை சொல்லும்போது அவர்கள் வாபஸ் பெறுவார்கள். அந்த படிவங்களை திரும்ப பெறும் அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு வழங்கவில்லை.

அதனால் இப்போது காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளர்களாக 6 தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு கட்சி நிர்வாகிகள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மீது கட்சி ரீதியாக நீக்கமோ, மற்ற நடவடிக்கையோ எடுக்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் கட்சி கொடியையும் அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் இக்கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

* நாராயணசாமிக்கு எம்.பி சீட்டா?
‘‘திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதே அவருக்கு சீட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. நான் வெற்றி பெற்றால் அந்த இடம் காலியாகும். அப்போது யார் அங்கு வருவார். நாடாளுமன்றத்தில் நன்கு பேசக்கூடிய நபர் வேண்டும் என்று தலைமை நினைத்தது தவறா? கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாராயணசாமி அந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். கட்சிக்காக தியாகம் செய்துள்ளார்.

2021ல் எங்களின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் திமுக, விசிகவுக்கு உரிய மரியாதையையும் அவர்கள் கேட்ட தொகுதியையும் நாங்கள் தந்தோம். ஆனால் இன்று அந்த கூட்டணியை அமைத்தது திமுக தலைமையில் தான். அவர்கள் தலைமையில் தான் நாங்கள் இதை சந்திக்கின்றோம்.

நிச்சயம் இந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது’’ என்று வைத்திலிங்கம் தெரிவித்தார். இந்த தேர்தலில் வைத்திலிங்கம் வென்று எம்எல்ஏவாக பதவியேற்றால், அவர் தற்போது உள்ள எம்பி பதவியை ராஜினாமா செய்வார். அந்த இடத்துக்கு நாராயணசாமி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று வைத்திலிங்கம் பேட்டி மூலம் தெரியவருகிறது.

 

Related Stories: