அசாம் தேர்தல் இந்த முறை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு வாழ்வா, சாவா களமாக மாறி இருக்கிறது. எப்படியாவது பா.ஜவை வெற்றி பெற வைக்க அவர் போராடி வருகிறார். தற்போது நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், ‘‘அசாமில் சுமார் 50 லட்சம் பிகா நிலங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளன. அடுத்த அரசை அமைத்த பிறகு, மேலும் 5 லட்சம் பிகா நிலங்களை நாங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்போம்.
செல்வாக்கு மிக்க நபர்களிடமிருந்தும் நிலங்களை நாங்கள் மீட்டு, அவற்றை ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிப்போம். ஒவ்வொரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாளரையும் விரட்டியடிப்போம். அவர்களின் அரசியல் முதுகெலும்பை முறிப்போம். இந்த முறை நாங்கள் கைகள், தலைகள் மற்றும் கால்களை முறித்துள்ளோம். அடுத்ததாக, நாங்கள் அவர்களின் அரசியல் முதுகெலும்பை முறிப்போம். அது கவுரவ் கோகாயாக இருந்தாலும் சரி அல்லது பத்ருதீன் அஜ்மலாக இருந்தாலும் சரி, அவர்களால் அசாம் மக்களுக்கு எதிராக நிற்க முடியாது.
அவர்களின் காலம் முடிந்துவிட்டது. இது எங்கள் நிலம், எங்கள் உரிமை; எங்கள் சமூகம், எங்கள் சுயமரியாதை . ஒரு வலுவான அசாமிய சமூகத்தை கட்டமைக்க நாங்கள் பாடுபடுவோம். இந்த முறை காங்கிரஸ் கட்சி 20 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால், அதுவே ஒரு பெரிய சாதனையாக இருக்கும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வராது’’ என்றார்.
* முதல்வர் முதுகெலும்பை நான் முறிப்பேன்
அசாம் முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கடுமையாக பதில் அளித்தர். அவர் கூறுகையில், ‘‘எங்கள் மக்கள் ஏழைகள்; அதனால் அவர்களை மிரட்டலாம் என்று முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா நினைக்கிறார். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நானும் அவருடைய முதுகெலும்பை முறிப்பேன்’’ என்றார்.
