புதுடெல்லி: டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பழுதடைந்ததால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த 6E 579 விமானம் 161 பயணிகளுடன் கிளம்பியது. விமானம் டெல்லியை நெருங்கிய நிலையில், இன்ஜின் பழுதடைந்தது.
இது குறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டன. பிறகு, அந்த விமானம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் அனைவரும், பாதுகாப்பாக வெளியிற்றப்பட்டனர். இதனால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரச்சனை கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி வாங்கி விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறோம் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
