தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கு தீத்தடுப்பு பயிற்சி வடமேற்கு மண்டல துணை இயக்குனர் பங்கேற்பு வேலூர் தீயணைப்பு நிலையத்தில்

வேலூர், பிப்.10: வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கு தீத்தடுப்பு பயிற்சியில், வடமேற்கு மண்டல துணை இயக்குனர் பங்கேற்றார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வுகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் செக்யூரிட்டிகளுக்கு அடிப்படை தீயணைப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களிலும் பிப்ரவரி 9ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கு தீ விபத்து தடுப்பது குறித்த பயிற்சி வேலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு வடமேற்கு மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு முன்னிலை வகித்தார்.

பயிற்சியில், தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அவசர காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், உதவி மாவட்ட அலுவலர்கள் பழனி, திருமுருகன், நிலைய அலுவலர்கள் முருகேசன், பாலாஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: