அணைக்கட்டு, மார்ச் 24: அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 102 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 6 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் விதி மீறி கார்களில் எடுத்து செல்லப்படும் பணம், பரிசு பொருளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சியினரும் சுவர் விளம்பரங்கள் செய்து கட்சிகளின் சின்னங்கள் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கேட்டு அணைக்கட்டு தொகுதி முழுவதிலும் இருந்து, 102 விண்ணப்பங்கள் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டது. மேலும், சின்னங்கள் வரைவது தொடர்பான சுவர் விளம்பரங்கள் செய்ய 102 விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்க தயார் நிலை செய்யப்பட்டு மனுக்கள் அளித்த கட்சியினருக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல் கண்ட்ரோல் ரூம் மூலம் ஆன்லைன் வழியாக வரும் புகார்கள், தொலைபேசி வாயிலாக வரும் புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது.
