பாலியல் புகார் குழு அமைப்பது கட்டாயம் மண்டல தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை தொழில் நிறுவனங்களில்

வேலூர், மார்ச் 21: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க பாலியல் புகார் குழு அமைப்பது கட்டாயம் என்று மண்டல தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் தொல்லைகளைத் தடுக்கவும், அதுகுறித்த புகார்களை விசாரிக்கவும் ‘உள்ளக புகார் குழு’ (இன்டர்னல் கம்ப்ளைன்ட்ஸ் கமிட்டி) அமைப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை (தடுத்தல், தடை செய்தல் மற்றும் தீர்வு காணுதல்) சட்டத்தின்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் இக்குழு அமைக்கப்பட வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறும் நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், உடனடியாக தங்கள் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உடனடியாக புகார் குழுவை அமைத்து, அதன் உறுப்பினர்கள் குறித்த விவரங்களை அறிவிப்புப் பலகையில் தொழிலாளர்கள் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். புகார் குழு குறித்த விவரங்களை https://www.tnswd-poshicc.tn.gov.in மற்றும் https://shebox.wed.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த விவரங்களை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கும், மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்கள் அரசாணை எண். 64ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது என்று வேலூர் மண்டல தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் தங்கதுரை மற்றும் சாந்தினி பிரபா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: