சண்டிகர்: பஞ்சாப் சட்டக்கல்லூரியில் மாணவி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்ட சக மாணவரும் குண்டுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் உள்ள உஸ்மா பகுதியில் சட்டக்கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரின்ஸ் ராஜ். இவர் நேற்று காலை தனது வகுப்பறைக்கு வந்துள்ளார். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவியான சந்தீப் கவுர்(19) மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தீப் கவுர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரின்ஸ்ராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ், மாணவி சந்தீப் கவுரை ஏன் சுட்டுக்கொன்றார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த முழு சம்பவமும் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. பிரின்ஸ், சந்தீப் மற்றும் மற்றொரு மாணவி ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காட்சிகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் வேறு சில மாணவர்களையும் காண முடிந்தது. திடீரென்று, பிரின்ஸ் எழுந்து, தனது பையில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து சந்தீப்பைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தரையில் விழுந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வகுப்பறைக்குள் சில மாணவர்கள் ஓடினர்.
