* கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரயில்களின் நேரக் கட்டுப்பாட்டில் சுமார் 16% வீழ்ச்சி
* வைகை, பல்லவன் ரயில்கள் ஏன் தாமதம்?
* ‘வந்தே பாரத்’ வேகத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக பயணிகள்
சென்னை: வந்தே பாரத் ரயில்களால் சாமானியர்கள் பாதிப்படைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் போக்குவரத்து நாடித் துடிப்பாக விளங்கும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகத் தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறதா? நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தாக்கல் செய்துள்ள சமீபத்திய அறிக்கை அப்படியொரு கேள்வியைத்தான் எழுப்பியுள்ளது. அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரும் விகிதம் கவலைக்குரிய வகையில் சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ரயில்வேயின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.2021-22 நிதியாண்டில் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரும் விகிதம் 90 சதவீதமாக இருந்தது. ஆனால், 2023-24 நிதியாண்டில் இது 73.62 சதவீதமாக செங்குத்தாகச் சரிந்துள்ளது.அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரயில்களின் நேரக் கட்டுப்பாட்டில் சுமார் 16% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாமதத்திற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ள மிக முக்கியமான காரணம், “புதிய அதிவேக ரயில்களுக்கு அளிக்கப்படும் மிதமிஞ்சிய முன்னுரிமை”. நாடு முழுவதும் வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக, சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே பிடித்து நிறுத்தப்படுகின்றன.
ஒரே தண்டவாளத்தில் பல ரயில்கள் இயங்கும் நிலையில், அதிவேக ரயில்களுக்கு வழிவிடுவதற்காக மற்ற ரயில்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. ரயில்வேயின் இத்தகைய அணுகுமுறை குறித்து நிலைக்குழு தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் மிக அதிகம். இதில் பயணிப்பவர்கள் வசதி படைத்தவர்கள். ஆனால், இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சாதாரண ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பெட்டிகளையே நம்பியுள்ளனர்.
ஒரு சிலருக்கான வசதிக்காக, பெரும்பான்மையான மக்களின் நேரத்தை வீணடிப்பது நியாயமற்றது என்று குழு கருதுகிறது.அதிவேக ரயில்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது, மற்ற சாதாரண ரயில்களின் சேவையைச் சிதைப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்று நிலைக்குழு எச்சரித்துள்ளது. ரயில்கள் தாமதமாவதற்கு உள்கட்டமைப்புப் பிரச்சனைகளும் ஒரு காரணம். தண்டவாளங்களைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக ரயில்வே பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட்டது.
ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக ரயில்கள் நிறுத்தப்படுவதும், அதே சமயம் விபத்துகளைத் தவிர்க்கப் போதுமான வேகம் இல்லாததும் முரண்பாடாக உள்ளது. முன்பெல்லாம் வைகை எக்ஸ்பிரஸ் என்றால் நேரம் தவறாது. ஆனால், இப்போது எப்போது வந்து சேரும் என்று சொல்ல முடிவதில்லை.இது மதுரை, திருச்சி, சென்னை மார்க்கத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தற்போதைய குமுறல்.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுநேற்று வெளியிட்ட அறிக்கை, தமிழக பயணிகளின் இந்த குமுறலுக்கு அதிகாரப்பூர்வமான காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களுக்கு வழிவிடுவதற்காக, சாமானியர்கள் பயணிக்கும் ரயில்கள் பல மணி நேரம் தாமதப்படுத்தப்படுகின்றன என்பதே அந்த அதிர்ச்சித் தகவலாகும். தமிழகத்தில் சென்னை – மைசூரு, சென்னை – கோவை, சென்னை – நெல்லை மற்றும் சென்னை – நாகர்கோவில் என அடுத்தடுத்து ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவை வரவேற்பைப் பெற்றாலும், மறுபக்கம் வழக்கமான ரயில்களின் சேவையை இது கடுமையாகப் பாதித்துள்ளது. வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் நிலை: திருச்சி மற்றும் மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயில்களான வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தென் மாவட்ட மக்களின் உயிர்நாடி போன்றவை. ஆனால், சென்னை – நெல்லை/நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இயங்கத் தொடங்கிய பிறகு, இந்த ரயில்கள் பல இடங்களில் ‘கிராசிங்’கிற்காக நிறுத்தி வைக்கப்படுவதாக பயணிகள் புகாரளிக்கின்றனர்.
குறிப்பாக, திருச்சி – விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாளப் போக்குவரத்து நெரிசல் அதிகம். இங்கே வந்தே பாரத் ரயிலுக்கு முன்னுரிமை அளிக்க, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கணக்கில் பிடித்து வைக்கப்படுகின்றன.
சென்னை – கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் போன்றவை, தொழில் நகரமான கோவைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்தினரின் தேர்வாக உள்ளது.
வந்தே பாரத் ரயிலுக்காக இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி போன்ற இடங்களில் தாமதப்படுத்தப்படுவதால், சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில், அலுவலக நேரங்களில் வந்தே பாரத் ரயில் கடந்து செல்லும் சமயங்களில், புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் தினசரி கூலி வேலைக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
* குழுவின் பரிந்துரை என்ன?
கே.சி. வேணுகோபால் தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, ரயில்வே அமைச்சகத்திற்குச் சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது: புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது அவசியம் தான் என்றாலும், அது ஏற்கனவே இயங்கும் ரயில்களின் இயக்கத்தைப் பாதிக்கக் கூடாது. அனைத்துத் தரப்பு பயணிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். ரயில்வேயின் வருவாய் உபரியாக இல்லாத நிலையில், கடன் மற்றும் வட்டிச் சுமை அதிகரித்து வருவதைச் சமாளிக்கத் திட்டமிட வேண்டும்.ரயில்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தடுக்கவும் ‘கவச்’ (Kavach) போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும்.
இவை அந்த குழுவின் பரிந்துரையாக உள்ளது. ரயில் பயணம் இனிமையானது என்ற வாசகம் மாறி, ரயில் பயணம் என்றாலே தாமதம் என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு. வந்தே பாரத் போன்ற நவீன வசதிகள் வரவேற்கத்தக்கவையே. ஆனால், அது கோடிக்கணக்கான சாமானியர்களின் நேரத்தையும், உழைப்பையும் விலையாகக் கொடுத்துப் பெறப்படக்கூடாது என்பதே இந்த அறிக்கையின் சாராம்சம் ஆகும்.
