விக்கிரவாண்டியில் தீ விபத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பலி

விக்கிரவாண்டி, பிப். 4: விக்கிரவாண்டியில் தீ விபத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குத்தாம்பூண்டி ரோட்டை சேர்ந்தவர் ஏகாம்பரம்(78), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் வேலூரில் உள்ள ஒரு மடத்தில் மடாதிபதியாக இருந்தார். அவ்வப்போது விழுப்புரம் வரும்போது, வீட்டிற்கு வந்து முதல் மாடியில் உள்ள அறையில் தங்கி செல்வது வழக்கம். இவரது மனைவி தரைத்தளத்தில் வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் வெளியூரில் தங்கி உள்ளனர். இந்நிலையில் வடலூரில் நடந்த தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட ஏகாம்பரம், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு குத்தாம்பூண்டி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாடியில் உள்ள அறைக்கு சென்று பூஜை செய்ய அகல் தீபம் ஏற்றிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, தீபம் அருகில் இருந்த துணி மற்றும் ஆன்மீக புத்தகங்கள் மீது எதிர்பாராதவிதமாக தீ பட்டு எரிந்து புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்போது புகையின் நெடியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பற்றி எரிந்த தீ இவரது உடலில் பரவியுள்ளது. இதனால் அலறி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ஜெயலட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். காயமடைந்த ஏகாம்பரத்தை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக கூறினர். இது குறித்து இவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், எஸ்ஐ தேவநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: