திருக்கோவிலூர், மார்ச் 24: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வளர்மதி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் எவ்வித அனுமதியின்றி ரூ.1.5 லட்சத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில், திருக்கோவிலூர் அடுத்த விலந்தை கிராமத்தை சேர்ந்த மணி மகன் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருக்கோவிலூர் வட்டாட்சியர் சரவணனிடம் ஒப்படைத்தனர். இதேபோல் தபோவனம் பகுதியில் பூமாரி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரிடமிருந்து 97 ஆயிரம் ரூபாய், கண்டாச்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.51,000 ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
