விழுப்புரம் அருகே மினிவேன் மீது டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி – 17 தொழிலாளிகள் காயம்

விழுப்புரம், மார்ச் 14: விழுப்புரம் அருகே மினிவேன் மீது டிப்பர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 17 தொழிலாளிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே ப.வில்லியனூரை சேர்ந்த கரும்புவெட்டும் தொழிலாளிகள் சுமார் 20 பேர் நேற்று அதிகாலை வி.மாத்தூர் பகுதியில் கரும்புவெட்டுவதற்காக மினிவேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாளையம் பேருந்துநிறுத்தம் அருகே சர்வீஸ் ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்திலிருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர்லாரி ஒன்று கரும்புவெட்டும் தொழிலாளர்கள் சென்ற மினிவேன் பின்புறத்தில் மோதியுள்ளது. இதில் வேன்சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் தூக்கிவீசப்பட்டு வேனிலிருந்த 18 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல்தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி(47), பிரபு(48),சேகர்(65),சுதாகர்(45), பட்டாபு(50), அண்ணாதுரை(48),பரமசிவம்(48),ரவி(52),வீரவேலு(65),சுரேஷ்(45),பாண்டியன்(50),பிரபாவதி(50), அங்கம்மாள்(45), செங்கேணி(48),கலியம்மாள்(50) உள்ளிட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனிடையே விபத்துக்குள்ளான பகுதிகளில் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் மினிவேன்தூக்கிவீசப்பட்ட நிலையில் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைப்பணிக்கு கட்டுக்கடங்காமல் செல்லும் லாரிகளால் தொடரும் விபத்து
விபத்து ஏற்பட்ட பகுதிகளில் நான்குவழிச்சாலைப்பணிகள் நடைபெறுகிறது. இந்த சாலைப்பணிகளுக்கு மண்களை கொண்டுசெல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் 5 கி.மீ தொலைவிற்கு மற்றவாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. கமிஷன்அடிப்படையில் ஒரேநேரத்தில் அதிக லாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதே தொடரும் விபத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்துபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் தொடர் விபத்துக்களை தடுக்க முடியாத நிலைஉள்ளது. எனவே சாலைப்பணிகளுக்கான வாகனங்களை குறிப்பிட்ட அளவே அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகளை குறைக்க முடியும் என்கின்றனர்.

Related Stories: