திருக்கோவிலூர் அருகே பாஜக பிரமுகர் காரில் ரூ.4,32,000 பறிமுதல்

திருக்கோவிலூர், மார்ச் 21: திருக்கோவிலூர் அருகே பாஜக பிரமுகர் காரில் இருந்து பறிமுதல் செய்த ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்தை சார் ஆட்சியரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணம் இன்றி ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங்கிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் காரில் வந்தவர், ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (56) என்பதும், திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் பகுதியில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. தற்போது சந்தைப்பேட்டையில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் பாஜக தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் எதற்காக காரில் பணம் கொண்டு சென்றார் என்பது குறித்து கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாஜக பிரமுகர் காரில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 4,32,000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: