சின்னசேலம், மார்ச் 20: திமுக, அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்காததால் சின்னசேலம் வட்டார பகுதியில் தேர்தல் பணி மந்தமாக உள்ளது. தமிழக அரசியலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி முக்கியமான தொகுதியாகும். இந்த தொகுதியில் திமுக கட்சி எம்எல்ஏவாக உள்ள உதயசூரியன் அரசியலில் முக்கிய நபராக வலம் வருகிறார். இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அனுபவமுள்ள எம்எல்ஏவாக மக்கள் பணியாற்றி வருகிறார்.
அதைப்போல அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த மோகன், வனத்துறை, உணவுத்துறை போன்ற துறைகளின் அமைச்சராகவும், சட்டமன்ற கொறடாவாகவும் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார். ஆகையால் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடக்கம் மார்ச் 30ந்தேதி எனவும், வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் தற்போதுவரை திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளின் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த தொகுதி யாருக்கு என்பது இதுவரை அறிவிக்கவில்லை.
இருந்தாலும் இந்த தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளே நேருக்குநேர் மோதும் என்றும், திமுக அரசின் சாதனைகளால், செயல்படுத்திய திட்டங்களால் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது. தற்போதுவரை திமுக, அதிமுக கட்சிகளில் வேட்பாளர் அறிவிக்காததால் சின்னசேலம் நகர, ஒன்றிய பகுதிகளில் இருபெரும் கட்சிகளும் சின்னம் வரைதல், தேர்தல் ஆயத்த கூட்டம் நடத்துதல் போன்ற பணிகளை துவங்கவில்லை. அதைப்போல கட்சிக்காரர்களும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி இருக்கின்றனர். தொகுதியில் வேட்பாளர் அறிவித்தால்தான் தேர்தல் பணி சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. அதற்கேற்ற வகையில் கட்சிகளில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
