சிதம்பரம், மார்ச் 24: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை மனைவி விமலா(31). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக கடந்த மாதம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொற்று மற்றும் தையல் பிரச்னை ஏற்பட்டதால் மீண்டும் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமடைந்ததால் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த விமலாவின் உறவினர்கள் நேற்று காலை சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவானந்தம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார் ஆட்சியர் கிஷன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
