விருத்தாசலம், மார்ச் 24: விருத்தாசலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வயலூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில், புதுக்குப்பம், கூட்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா மகன் முகமது ரியாஸ்(26) மற்றும் புதுக்குப்பம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன்(25) ஆகியோர் எனவும், இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
