விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்

ரெட்டிச்சாவடி, மார்ச் 20: விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து சாலையோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர். விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்து தொடங்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று நேற்று மதியம் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தது. இந்த காரை கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (45) என்பவர் ஓட்டி வந்தார். கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவரும் இந்த காரில் பயணம் செய்து வந்தார். அப்போது விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை அருகே வந்தபோது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த இருவரையும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். பின்னர் இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: