மதுரை: அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும், பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி, இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
