தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றபோது முதல்வராக இருந்த எடப்பாடி போய் பார்த்தாரா?: பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதிலடி

கோவை: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் பலியான 41 பேர் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து விஜய் ஏன் ஆறுதல் கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கேள்வி எழுப்பியதற்கு, தூத்துகுடியில் 13 பேரை சுட்டுக் கொன்றார்களே அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா என்று செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையேதான் போட்டியே தவிர, அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிசாமி சொல்வதை போன்ற நிலையில் தற்போது இல்லை.

என்டிஏ கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துகின்றார்? எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள். அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? அங்கு 100 நாள் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர்கள் யாராவது பேச்சுவார்த்தைக்கு போனார்களா? இல்லை. ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது. அந்த சம்பவம் காலையில்தான் தனக்கு தெரியும் என்கிறார் முதல்வராக இருந்த பழனிசாமி.

எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார்? என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கே தெரியும். அப்படி இருக்கையில் அவர் விஜயை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். தவெக தனித்து விடப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘பொதுவாக தேர்தல் கூட்டணி முடிவுகளை தலைவர்தான் மேற்கொள்ள வேண்டும். அதிமுகவில் ‘தெர்மாகோல்’ பல்வேறு கருத்துகளை சொல்வதைபோல நாங்கள் சொல்ல முடியாது’’ என்று செல்லூர் ராஜூவை கிண்டலடித்தார்.

Related Stories: