காங்கிரசில் இருந்து விலக மாட்டேன்: சசி தரூர் எம்.பி. உறுதி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் எண்ணமில்லை என்று அந்த கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் எம்பியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அந்த கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தலில் அவர் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் வெறும் 1,000 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆனால், 7,897 வாக்குகளை பெற்ற கார்கே தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் சசி தரூருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. அப்போது, முதல் கட்சியிக்கு எதிரான நிலைபாட்டையே சசி தரூர் எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க வில்லை. முன்னதாக, சோனியா காந்தி, கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளையும் அவர் புறக்கணித்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. இதற்கு, சசி தரூர் மறைமுகமாக உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், சசி தரூர் பங்கேற்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘ நான் தொடர்ந்து காங்கிரசில் இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன். எனது முந்தைய கருத்துகள் பாஜவுக்கு ஆதரவானது கிடையாது. நமது தேசத்துக்கு ஆதரவான கருத்துகள். சில விவகாரங்களில் எனது கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி மதவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வுக்கு எதிராக குரல் எழும்பி வருகிறார். நானும் மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கிறேன்,’என்றார்.

Related Stories: