சென்னை: ஆதாரமற்ற, அவதூறு பரப்பும் வகையிலான கருத்தைத் தெரிவித்துவிட்டு, சற்றும் பொருந்தாத வகையில் விளக்கம் அளிப்பதா என்று ஆதவ் அர்ஜுனாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘‘திருமா அண்ணா என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கட்சி இங்கு (தவெக) மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. உங்கள் கட்சியில் நீங்களும் 20 பேரும்தான் உள்ளீர்கள். தொண்டர்கள் மொத்தமாக இங்கு மாறிவிட்டார்கள்’’ என விசிகவை விமர்சித்தார். இது விசிகவினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
விசிகவில் எம்பி சீட் கிடைக்காத விரக்தியில் திமுக, விசிக கூட்டணியை உடைக்க திட்டமிட்டு பேசி வந்த ஆதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் சில நாட்களில் தவெகவில் சேர்ந்தார். அங்கு கூட்டத்திற்கான மொத்த செலவுகளையும் அவர் செய்வதால், அவரை எல்லா கூட்டத்திலும் பேச அனுமதிக்கின்றனர். அப்படி பேசித்தான் தற்போது அவர் வாங்கிக் கட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
அந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, ‘‘நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. திமுகவால் என் பேச்சு திரித்துவிடப்பட்டிருக்கிறது. ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடி வருகிறார். ஆனால், அந்தக் கட்சியில் உள்ள 20 நபர்கள் திமுகவின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் திமுகவினராகவே மாறிச் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி முழுக்க முழுக்க திமுகவின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் விசிகவுக்குள் இருக்கிறார்கள் என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘விசிகவில் 20 பேர் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டது’’ என ஒரு கற்பனை வாதத்தை முன்வைத்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு Gen Z புரட்சி வெடிக்கும் எனப் பதிவிட்ட அரைமணி நேரத்தில் பதிவை நீக்கிவிட்டு, நீதிமன்றத்தில் எந்த உள்நோக்கத்திலும் அதை பதிவிடவில்லை என்று அந்தர்பல்டி அடித்து மன்னிப்பு கேட்டவர்தான் ஆதவ் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தான் தற்போதைய விளக்கமும் அந்தர்பல்டி வகையில் உள்ளதாக கிண்டல் செய்து வருகிறார்கள். இதுபோன்ற ஆதாரமற்ற, அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளை தெரிவித்துவிட்டு, அதற்கு எதிர்ப்பு வலுக்கும் போது நான் அவ்வாறு சொல்லவில்லை என சற்றும் பொருந்தாத விளக்கம் கொடுப்பதை தனது வழக்கமாக வைத்துள்ளார் இந்த ஆர்வக்கோளாறு அரசியல்வாதி ஆதவ் அர்ஜுனா எனச் சமூகவலைதலங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
