வைத்திலிங்கம் தலைமையில் இணைப்பு விழா; தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் நேற்று இணைந்தனர். இணைப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெல்வோம் 200-படைப்போம் வரலாறு என உறுதிபடக் கூறினார்.

டெல்டா மண்டல திமுக மகளிரணி அணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் நேற்று காலை 10.50மணிக்கு திருச்சி வந்தார். முதல்வருக்கு, கட்சி சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் செங்கிப்பட்டி அருகே திருமலை சமுத்திரத்திற்கு 12.30 மணியளவில் சென்றார். அங்கு முதல்வர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சின்னாபின்னமாகி உடைந்தபோது, சட்டசபையில் கூட வைத்திலிங்கம் எதையோ பறிகொடுத்தவர்போல கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது. என்ன, அவர் சற்று லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். இதுதான் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நெருங்கி விட்டது. அவ்வாறு நெருங்கும் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் பணியாற்ற உறுதி எடுப்போம்; சபதம் ஏற்போம். மீண்டும் நம்முடைய திராவிட மாடல் அரசு உதயமாகி, ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கித் தருவதற்கு, நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, ‘வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு’, ‘வெல்வோம் ஒன்றாக’. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து வைத்திலிங்கம் பேசுகையில், இன்றைக்கு இந்த திராவிடத்தை கண்டாலே சிலருக்கு மனவேதனை. யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு, இன்றைக்கு நமது முதல்வர் எதற்கும் துணிந்து, ‘என்னுடைய உயிர் திராவிடம்தான்’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்போதும் நாம் அவருக்கு துணையாக இந்த திராவிடத்தை காக்க பாடுபட வேண்டும். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல் இன்றைக்கு அவர் மடியில் நான் விழுந்திருக்கின்றேன் என்றார்.

மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார். துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் கோவி செழியன், அன்பில் மகேஷ், எம்பி முரசொலி, எம்எல்ஏ. டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: