என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும்; தர்மயுத்தம் நடத்தாம இருந்தா ஓபிஎஸ்தான் முதல்வர்: டிடிவி.தினகரன் புது குண்டு

தேனி: என்டிஏ கூட்டணியில் இணைய ஓபிஎஸ் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தால் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகி இருப்பார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நேற்று அளித்த பேட்டி:
பங்காளி சண்டை இல்லாத குடும்பங்கள் இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன். அதையெல்லாம் மறந்து விட வேண்டும். என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து ஓபிஎஸ்சுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணம். ஜெயலலிதா இறந்தபோது, நான் கேட்டுக் கொண்டதால் ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், திடீரென தர்மயுத்தம் நடத்தினார். அப்போது அவர் தர்மயுத்தம் நடத்தாமல் இருந்திருந்தால் சசிகலா பதவியேற்க முடியாத நிலை ஏற்படும்போது மீண்டும் 2024ல் முதல்வராகியிருப்பார். இவ்வாறு கூறினார்.

‘தேர்தலில் போட்டி இல்லை; 7 பேரை அமைச்சராக்க ஆசைப்படுகிறேன்’
டிடிவி தினகரன் முதலில் கூறுகையில் ‘நான் ஆண்டிப்பட்டியில் மட்டுமில்லை. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எனக்காக பதவி இழந்த 18 பேரில் தற்போது ஏழு பேர் என்னுடன் இருக்கின்றனர். அவர்களை எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாலும் அவர்கள் விருப்பப்பட்டால் கூட்டணி அமைச்சரவை அமைக்கலாம். அப்போது என்னை சார்ந்தவர்களையும் அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.’’ என்றார்.

‘சினிமா டயலாக் பேசாம பிளாக் டிக்கெட்டை ஒழியுங்க’: விஜய் மீது கடும் தாக்கு
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘விஜய் சினிமா டயலாக் போல் பேசுகிறார். உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள். 100 ரூபாய் டிக்கெட்டை 1,500 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பதை ஒழியுங்கள். முதலில் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். எங்களை போல் செய்தியாளர்களை சந்தியுங்கள். அதைவிட்டு விட்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரின்னு சினிமா டயலாக் பேசக்கூடாது. நாங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது?’’ என்றார்.

எடப்பாடிக்கு பிரசாரம்
‘‘கட்சியில் இருந்த ஸ்லீப்பர் செல் எல்லாம் தற்போது லைவ் செல்லாக மாறி விட்டார்கள். எடப்பாடி தொகுதியில் நான் அவரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். அதிமுக போட்டியிடும் இடங்களில் அமமுக அதிக கவனம் செலுத்தியும், அமமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக அதிக கவனம் எடுத்தும் தேர்தல் பணியாற்றுவோம்’’ என்று டிடிவி கூறினார்.

Related Stories: