சென்னை: விஜய்யின் ஊழல் சக்தி விமர்சனம் எதிரொலியாக அதிமுக-தவெக இடையே மோதல் ெவடித்துள்ளது. படம் ரீலிஸின் போது ஜெயலலிதா காலில் விழுந்தது யார் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. கூவத்தூரில் நடந்த கும்மாளம் ஞாபகம் இல்லையா என்று தவெக கூறியுள்ளது. இப்படி சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணியில் தவெக மும்முரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கிய பிரமுகர்களை இழுக்கும் படத்தில் தவெக ஈடுபட்டு வருகிறது. பலர் அவரது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதே நேரத்தில் தான் பேசும் பொதுக்கூட்டத்தில் எல்லாம் இதுவரை திமுக மற்றும் பாஜவை மட்டுமே நேரடியாக விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பில் அவ்வப்போது பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. இதற்று அவரே விளக்கம் அளித்து இருந்தார். தவெக, திமுகவுக்கு இடையே தான் போட்டி. எனவே, நாங்கள் மற்ற கட்சிகளை தவெகவுக்கு போட்டியாக கருதவில்லை. இதுவே அதிமுகவை விமர்சிக்காததற்கு காரணம் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
அதே நேரத்தில் அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் விஜய்யை விமர்சிப்பதை தவிர்த்து வந்தது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நேரடியாக தவெகவுக்கு ஆதரவாக பேச தொடங்கியது அதிமுக. ‘கொடி பறக்குது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்றெல்லாம் பழனிசாமி பேசி இருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விஜய் தான் முதல்வர் வேட்பாளர். அவர் தலைமையில் தான் கூட்டணி என்று அறிவித்து, கூட்டணிக் கதவை மூடியது.
இந்த நிலையில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசினார். அதில் இதுவரை அதிமுகவை விமர்சிக்காத விஜய், அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, இதற்கு முன்னாள் ஆட்சி செய்தவர்களை (அதிமுக) போன்று நான் ஊழல் செய்ய மாட்டேன். தமிழகத்தில் மீண்டும் தீய சக்தி அல்லது ஊழல் சக்தி ஆட்சியில் அமரக் கூடாது என்றும் கடும் விமர்சனங்களை வைத்து இருந்தார். முதல்முறையாக அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பதிலடியும் கொடுத்தனர். உடனடியாக அதிமுக ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்றும் கூறினர்.
இந்த விவகாரத்தையடுத்து நேற்று காலை முதல் அதிமுக மற்றும் தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் மாறி, மாறி கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தவெகவுக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் வெளியிட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோக்களில், \\”அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் பிரதமர் மோடியின் காலில் விழுவது போன்று வெளியிட்டனர். மேலும் கூவத்தூர் சம்பவத்தை காட்டி அங்கு என்ன வெல்லாம் நடந்தது. அதில் அன்றைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடனமாடிய காட்சிகளை எல்லாம் காட்டி பல விமர்சனங்களை வைத்தனர். குறிப்பாக தவழ்ந்து தான் வந்து ஆட்சியை பெறப்பட்டது என்றும் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக வெளியிட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோக்களில், தவெக தலைவர் விஜய்யும் அவரது தந்தையும் பட வெளியீட்டுக்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கால்களில் விழுவது போன்று வீடியோவை வெளியிட்டுள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன் 5 மணி நேரம் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி ஆட்சி காலத்திலும் சரி காத்து கிடந்தது நினைவுக்கு இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாஸ்டர் படம் ரீலிஸ் ஆகும் போது, அன்றைய முதல்வர் காலில் விழுந்து தான் அன்றைக்கு அந்த படம் வெளியே வருவதை உறுதி செய்து கொண்டார் என்றும் படத்தையும் வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களில் வரும் காமெடி காட்சிகளை எல்லாம் பயன்படுத்தி விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக அண்ணாவின் கொள்கை பாதையில் இருந்து விலகி சென்று விட்டது. அதிமுகவின் செயல்பாடு பாஜவின் ஒரு பிரிவு போல இருக்கிறது என்றும் கிண்டல் செய்து வீடியோக்களை தவெகவினர் வெளியிட்டுள்ளனர். அதற்கு அதிமுக, பனையூர் பண்ைணயாரே பிளாக் டிக்கெட் விற்பனை செய்தது இல்லையா. அடுத்தப்படியாக மத்திய அரசுக்கு அடிமை என்று கேட்கிறீர்களே. நீங்கள் அதிமுக ஆட்சியில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் 5 மணி நேரம் அம்மையார் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, எடப்பாடி ஆட்சி காலத்திலும் சரி காத்து கிடந்தது நினைவுக்கு இல்லையா? என்றும், விஜய் கண்ணீர் வடிப்பது போலவும் ஏஐ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கரூர் சம்பவத்தில் விஜய்யும், தவெகவினரும் நடந்து கொண்ட விதம் குறித்து கடுமையாக அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக இறந்தவர்களை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது தான் வழக்கம். ஒருவர் பாதிக்கப்பட்ட போதும், ஒருவர் குடும்பத்தில் இறப்பு நேர்ந்தாலும் கூட தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்தவர் விஜய் தானே. கிளிசரின் போட்டு கொண்டு கண்ணீரோடு போட்டோ சூட் நடத்தியது ஞாபகம் இல்லையா. தன்னை சுற்றியே உலகம் இயங்குவது போல ஒரு பெருமை வளையத்துக்கு உள்ளேயே அவர் சுருங்கி போய் இருக்கிறார் என்றும் பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எல்லை மீறி ஏஐ தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு மோதி வருவது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. மேலும் இப்படியா வாய்க்கு வந்தபடி, பேச கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசுவார்கள் என்றும் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
