சிவகங்கை அதிமுகவில் சீட்டு பஞ்சாயத்து: உள்ளடி வேலையில் மாஜி மந்திரி; புலம்பி விக்கிறார் சிட்டிங் எம்எல்ஏ

சிவகங்கை: சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சருடன் சீட்டுக்கு மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு அமமுகவும் சீட்டு கேட்டு வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தவர் பாஸ்கரன். ஆனால் 2021 தேர்தலில் இவரை ஓரம் கட்டிவிட்டு, இத்தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாகவும் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் செந்தில்நாதன்.

கடந்த தேர்தலில் காரைக்குடி தொகுதிக்கு குறிவைத்த அவர், கடைசி நேரத்தில் தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டதால் சிவகங்கையில் போட்டியிட்டார். சிவகங்கை தொகுதி அமைச்சர் தொகுதியாக இருந்தபோதும், மேலிட செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தேவகோட்டையை சேர்ந்த செந்தில்நாதன், சிவகங்கையில் போட்டியிட்டு நம்மளை கவுத்துட்டாரே? அமைச்சரான நமக்கே அல்வா கொடுத்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத பாஸ்கரன், அதன் பிறகு அதிமுக நிகழ்ச்சிகளில் எப்போதாவது தலை காட்டும் வகையில் ஒதுங்கி கொண்டார்.

இதனால் இரண்டு தரப்பிற்கும் தற்போது வரை கோஷ்டி பூசல் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் தனது கட்டாய லிஸ்ட்டில் சிவகங்கையை வைத்துள்ளது பாஜ. அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி இங்கு போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். மாவட்டத்தில் ஒரு தொகுதி என்ற மிரட்டலால் நமக்கே சிவகங்கை என அவர் நம்பிக்கையோடு உள்ளார்.

இம்முறை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மகனும், அதிமுக மாநில நிர்வாகியுமான கருணாகரனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பாஸ்கரன் தரப்பிலும் கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இவர் தவிர மாநில நிர்வாகி தமிழ்செல்வனும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் காரைக்குடியை அமமுக குறி வைத்துள்ளது. யூனியன் சேர்மன் பதவி வரை வகித்ததால் கட்டாயம் அமமுகவிற்கு தான் சீட், அக்கட்சி மாவட்ட செயலாளர் தேர்போகிபாண்டி தான் வேட்பாளர் என்றும், செந்தில்நாதனை அங்கு வரவிட்டுவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் குறியாக உள்ளனர். சிவகங்கை தொகுதிக்கு இவர் எதுவும் செய்யவில்லை. மீண்டும் நின்றால் வெற்றி பெற முடியாது என பிரசாரம் செய்து செந்தில்நாதனை இங்கு போட்டியிட விடக்கூடாது என மாஜி அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர், பல உள்ளடி வேலைகளை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அமைச்சர் தொகுதி என்பதால் செட் ஆகாது. மானாமதுரை தனி தொகுதி என்பதால் சிவகங்கை அல்லது காரைக்குடி இரண்டு தொகுதியில் ஒன்றில் தான் செந்தில்நாதன் போட்டியிட வேண்டும். அவருக்கு வேறு வழியே இல்லை. ஆனால் இரண்டுமே கூட்டணிக்கு போகும் நிலை உள்ளதால் அதிர்ச்சியில் உள்ளார் அவர். சொந்த தொகுதியான காரைக்குடியை விட்டு சிவகங்கை வந்தது இப்போது தனக்கு இவ்வளவு சிக்கலாகிவிட்டதே என அவர் புலம்பி வருகிறாராம்.

Related Stories: