புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே்கு 3வது வரிசையில் அமர வைத்ததன் மூலம் பாஜ அரசு அவர்களை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி கடமை பாதையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 3வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுலுடன் 3வது வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் பின்னர் அவர் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு அடுத்ததாக முதல் வரிசைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, 3 வது வரிசையில் கார்கே, ராகுல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘‘நாட்டில் எதிர்க்கட்சி தலைவருக்கு இத்தகைய மரியாதை அளிப்பது கண்ணியம், பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளின் தரத்திற்கு ஏற்புடையதா? இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட அரசின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட இந்த மரியாதை ஏற்றுக்கொள்ள முடியாதது’’ என கூறி உள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் முக்கிய தலைவர் விவேக் தன்காவும் அந்தப் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘‘இது முற்றிலும் நெறிமுறை மற்றும் கண்ணியமின்மையைக் காட்டுகிறது. தற்போதைய காலங்களில் இதை எதிர்பார்ப்பது அதிகப்படியானது போலும். குடியரசு தின கொண்டாட்டங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இன்றைய சூழலில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியிடமிருந்து இதைவிட சிறந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. ஆளும் கட்சியின் இந்த அற்பச் செயலால் ஜனநாயகம் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது’’ என கூறி உள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் கொறடாவான மாணிக்கம் தாகூர், எல்.கே. அத்வானி அவரது மகளுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் ஒன்றிய அமைச்சர்களும் சோனியா காந்தியும் அதே வரிசையில் அமர்ந்திருந்ததும் காணப்பட்டது. இது குறித்து மாணிக்கம் தாகூர், ‘‘இது 2014ல் எடுக்கப்பட்டது. அப்போது அத்வானி எங்கு அமர்ந்திருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை குளறுபடி? மோடியும் அமித்ஷாவும் கார்கே, ராகுலை அவமதிக்க விரும்புவதால்தானா? எதிர்க்கட்சித் தலைவர்களை இப்படி அவமதிக்க முடியாது’’ என கூறி உள்ளார்.
பாஜ பதிலடி
காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா எக்ஸ் தளத்தில், ‘‘மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் தகுதி, அகங்காரம், குடும்பம் மற்றும் பதவியை மக்களுக்கு மேலாக வைத்துள்ளது. குடும்ப ஆட்சிதான் அரசியலமைப்புச் சட்டத்தை விட உயர்ந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ராகுல் காந்தியைச் சுற்றியோ அல்லது அவருக்குப் பின்னாலோ கூட மூத்த அமைச்சர்கள் அமர்ந்திருப்பதை பார்க்கலாம். ஆனால் அவர்களில் யாரும் இதை ஒரு பிரச்னையாக ஆக்கவில்லை’’ என்றார்.
