‘சத்திரியனாக வாழ்ந்தோம் இனி சாணக்கியனாவோம்’: பிரேமலதா சபதம்

விளாத்திகுளம், ஜன.27: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரத யாத்திரை என்ற பெயரில் தமிழக முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பரப்புரை மேற்கொண்டார். விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நடைபெற்ற கேப்டன் ரத யாத்திரையுடன் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தார்.

விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவர் பேசுகையில், ‘எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி. சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. உங்களை பதவியில் வைத்து அழகு பார்ப்பதுதான் எனது கனவு, லட்சியம். விரைவில் நல்ல கூட்டணி அமைத்து அறிவிப்பேன். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. கூட்டணியில் அவசரப்படக்கூடாது. இதுவரை சத்திரியனாக வாழ்ந்து விட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். கட்டாயமாக இந்த முறை நீங்கள் விரும்பும் கூட்டணியைத்தான் அமைப்பேன்’ என்றார்.

‘பிப்ரவரி நடுவில் கூட்டணி அறிவிப்பு’
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம், ‘‘யாருடன் கூட்டணி என்பதை பிப்ரவரி 3ம் தேதி சென்னைக்கு சென்றபின், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுத்து பிப்ரவரி நடுவில் கூட்டணியை அறிவிப்போம்’’ என்றார்.

Related Stories: