நெல்லை: விஜய்க்கு பாஜ அழுத்தம் கொடுக்கிறதா என்பது பற்றி பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தேமுதிக மற்றும் பாமகவின் ராமதாஸ் அணி எங்களது தே.ஜ. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் கிடைக்கும்.பாஜவிற்கு யாரையும் அடிமையாக வைக்கக்கூடிய கட்டாயம் இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். தவெகவில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது. விஜய்க்கு பா.ஜ கட்சி எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.வில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை. ஆகையால் பா.ஜ.வை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வகையில் தான் டி.டி.வி தினகரனும் வந்துள்ளார். அரசியலில், நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார். அந்த அடிப்படையில் தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
