திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதல்வராவது கடினம்; நடிகர் விஜய்க்கு அரசியல் அனுபவம் பத்தாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
அரசியலில் அனுபவம் என்பது மிக முக்கியமானது. நானும், அண்ணாமலையும் உயர்ந்த பதவிகளை வகித்துவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால், விஜய்க்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை. அனுபவம் இல்லாமல் நேரடியாக அரசியலில் குதிப்பது வெற்றியை தந்துவிடாது. அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். விஜய் ஒரு பூஜ்ஜியம் போன்றவர். பூஜ்ஜியம் தனியாக இருந்தால் அதற்கு மதிப்பே இல்லை. அதற்கு முன்னால் ஒரு எண் சேர்ந்தால் தான் மதிப்பு கிடைக்கும்.

அதுபோல, அனுபவம் உள்ளவர்களுடன் இணையும் போதுதான் அரசியலில் ஒருவருக்கு மதிப்பு உருவாகும். எம்ஜிஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணித்ததால் வெற்றி பெற்றார். திரைத்துறையிலிருந்து நேரடியாக வந்து உடனே வெற்றி பெறுவது எளிதல்ல. விஜய் தனது தொண்டர்களை ஏமாற்றும் வகையில் அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. 2026ல் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். அதுவே அவருக்குப் பாதுகாப்பான பாதை. அரசியல் என்பது தனிநபர் முயற்சி அல்ல.

வெற்றி பெறக்கூடிய கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதே புத்திசாலித்தனம். விஜய் பேசுவதால் என்டிஏ கூட்டணி குறைந்து போய்விடாது. அரசியலில் அனுபவம் இல்லாததால் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திமுகவுக்கும், என்டிஏ கூட்டணிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, வெற்றி பெறும் அணியுடன் விஜய் கைகோர்ப்பதே நல்லது.

Related Stories: