நாங்க அரசியல் கட்சியே இல்ல.. ஓபிஎஸ் விரக்தி

சென்னை: நாங்க அரசியல் கட்சி இல்லை, என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விரக்தியுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக, அவரிடம் இருந்து விலகி, மாற்று கட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம், திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவளராக செயல்பட்டு வந்த, ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தற்போது வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், திருச்சி செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், ‘‘நீங்க வைத்திலிங்கத்திடம் போய் கேளுங்க’ என்று கோபமாக கூறினார். தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறியிருந்தீர்களே என்று கேட்டதற்கு, இன்னும் 25 நாட்கள் இருக்கிறது, பொறுத்திருங்க என்றார். அரசியலில் நீங்க, சரியான முடிவு எடுக்காததால், உங்களின் ஆதரவாளர்கள், ஒவ்வொருவராக மாற்று கட்சியில் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘எந்தக் கட்சி?, நாங்க அரசியல் கட்சியில் இல்லை’ என்று, விரக்தியின் உச்சக்கட்டமாக, பதிலளித்துவிட்டு சென்றார்.

Related Stories: