பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளவாய்குளம் கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு களைகட்டிய விற்பனை

கீழ்பென்னாத்தூர்: வேட்டவலம் அருகே உள்ள தளவாய்குளம் கால்நடை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் கிராமத்தில் ஞாயிறுதோறும் நடைபெறும் வாரச்சந்தையில், கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. இச்சந்தைக்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், கண்டாச்சிபுரம், திருக்கோவிலூர், கலசபாக்கம், சோமாசிபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகள், காளை மாடுகள், பசுக்கள், சேவல் கோழிகள், வாத்து, வான்கோழி உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து போட்டிபோட்டு வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று தளவாய்குளம் வாரச்சந்தை வழக்கம்போல் கூடியது. வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால், சந்தையில் ஆடு, மாடு, கோழி, வான்கோழி உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு திரண்டனர். அதிகாலை 4 மணி முதல் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்ததால் விற்பனை களைகட்டியது. மேலும், கிராம பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடு மற்றும் கோழிகளுக்கு, நகரங்களில் அதிகளவு வரவேற்பு உள்ளதால், கூடுதலாக வர்த்தகம் நடைபெற்றது. வியாபாரிகள் துண்டை போட்டு கைகளை பிடித்து மறைமுகமாக பேரம் பேசி கால்நடைகளை வாங்கினர். அதன்படி, நேற்று சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை நடைபெற்றறது. இதில் ஒரு மாட்டின் விலை ரூ.20ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும், ஒரு ஆட்டின் விலை ரூ.8ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், கோழி மற்றும் வான்கோழி ரூ.500 முதல் ரூ.1500 வரையிலும் விற்பனை நடந்ததாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: