புதுச்சேரி: வரும் தேர்தலில் பாஜ-என்ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடருவது பற்றி பேச வந்த பாஜ தேசிய செயல் தலைவரிடம் முதல்வர் ரங்கசாமி, ‘இது மார்கழி மாதம், தை மாதம் பேசிக்கலாம்…’ என்று கூறி திருப்பி அனுப்பியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என பாஜ தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதனை முதல்வர் ரங்கசாமி இதுவரை வெளிப்படையாக அறவிக்கவில்லை. தேர்தல் வரும் போது சொல்கிறேன் என கூறி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, ரங்கசாமி அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, உங்கள் வழியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது.
இதனால், பாஜவை கழற்றிவிட்டு விட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவும் ரங்கசாமி உடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக நெருங்கிய நண்பரான புஸ்ஸி ஆனந்த், ரங்கசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன் வெளிப்பாடே, சமீபத்தில் புதுச்சேரியில் பிரசாரம் செய்த விஜய், ரங்கசாமியை பாராட்டிவிட்டு, கூட்டணியில் உள்ள பாஜவை தாக்கி பேசிவிட்டு சென்றார். இந்த சூழலில், ரங்கசாமியை சமாதானம் செய்ய புதுச்சேரி வந்த பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க கோரிமேடு அப்பா பைத்தியம்சாமி கோயில் வளாகத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ெசன்றனர். அப்போது அவர்களை வரவேற்ற ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்து விபூதி, எலுமிச்சம் பழம், பூக்களை கொடுத்தார்.
இதன் பின் முதல்வர் ரங்கசாமி வீட்டில் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். வரும் சட்டசபை தேர்தலிலும் பாஜவுடன் என்ஆர்.காங் கூட்டணி தொடர வேண்டும் என மேலிட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு ரங்கசாமி, இது மார்கழி மாதம், தைமாதம் பேசிக்கலாம் என தெரிவித்ததோடு, அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட சில அரசியல் நிகழ்வுகளை சுட்டிகாட்டி நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்வது குறித்து ரங்கசாமி நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பலான பதிலையே பாஜவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியே வந்த தேசிய தலைவர் நிதின் நபினிடம், கூட்டணி தொடருமா? முதல்வரிடன் என்ன பேசினீர்கள் என்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார். முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, ‘புதுச்சேரி மாநில வளர்ச்சி, தேவையான நிதியை பெறுவது, ஒன்றிய அரசின் உதவியுடன் புதிய திட்டம் கொண்டுவரப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேஜ கூட்டணி ஆட்சிதான் இப்போது நடந்து வருகிறது’ என்றார். பாஜவுடன் கூட்டணி தொடருமா? தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா? பாஜ அமைச்சர் ஜான்குமார், எல்ஜேகே தலைவர் சார்லஸ் மார்ட்டினுடன் இருக்கிறாரே என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கவில்லை.
கூட்டணி முறிந்து விட்டதா? பாஜ அமைச்சர் டென்ஷன்
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டி: தேஜ கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? அவர்களுக்கு எத்தனை சீட்டு என்பதெல்லாம் அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும். வெளியில் சீட்டு எண்ணிக்கை தொடர்பாக பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பாஜ செயல் தலைவர் முதன்முதலாக பொறுப்பேற்ற பின், தேஜ கூட்டணி ஆட்சியின் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே என்.ஆர் காங்கிரஸ் கட்சி, கூட்டணியில்தான் உள்ளது. இந்த கூட்டணி எப்போது முறிந்தது.
முதல்வர் எப்போதாவது கூட்டணியில், தான் இல்லையென்று சொல்லியிருக்கிறாரா?. தேஜ கூட்டணி தொடர்ந்து இருக்கிறது, அதன் ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் இல்லை என்று சொன்னால்தான் தொடர்கிறோம் என்று சொல்ல வேண்டும். கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். கூட்டணி அரசாங்கம்தான் புதுச்சேரியில் நடக்கிறது. அதைப்பற்றிய சந்தேகம் என்ன? கேள்விக்கே வேலை இல்லை. மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக நிர்வாக ரீதியில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து முடிவு எடுக்கும். கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை சீட்டு போன்ற பேச்சுவார்த்தைகள் இன்னமும் முடிவாகவில்லை. லட்சிய ஜனநாயக கட்சியின் பேனரில் பாஜ அமைச்சர் ஜான்குமார் இடம்பெற்றிருப்பது தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
