தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி; சட்டமன்றத்திற்கு செல்லாத 2 பேரை போட்டி என்பதா..? விஜய், சீமானுக்கு உதயகுமார் கும்மாங்குத்து

மதுரை: வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான் போட்டி. சட்டமன்றத்திற்கு செல்லாத 2 பேரை போட்டி என கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: 2026 தேர்தலிலே தமிழகம் விரும்பும் முதல்வர் யார் என்கிற விவாதம் பொதுவெளியில் நடைபெற்றாலும் கூட, மக்கள் மீது யார் அக்கறை செலுத்துகிறார்களோ, அவர்கள்தான் தமிழ்நாட்டினுடைய முதல்வர் என்பதே வாக்காளர்களாகிய மக்களின் தீர்ப்பு. அந்த வகையில் இன்றைக்கு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் தான் தீர்ப்பை எழுத போகிறார்கள்.

களத்தில் 4 பேர் நிற்பதாக சிலர் விவாதித்தாலும் கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் ஆட்சி, எடப்பாடி ஆட்சியை மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும். இரு ஆட்சிகளையும் மக்கள் பார்த்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலை முதல் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆன அனுபவமுள்ள 2 பேர் சந்திக்கிறார்கள். இதில் இன்னும் 2 பேர் (விஜய், சீமான்) சட்டமன்றத்திற்குள்ளேயே செல்லாதவர்கள். அவர்களை போட்டியாளர்கள் என்பதா? இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: