பாஜவின் மதவெறி அரசியலுக்கு முதல் களப்பலி பூர்ணசந்திரன்: திருமாவளவன் சாடல்

கோவை: திருப்பரங்குன்றம் பூர்ணசந்திரன் தற்கொலை என்பது பாஜவின் மதவெறி அரசியலுக்கு முதல் களப்பலி என திருமாவளவன் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: 100 நாள் வேலை திட்டத்தை முற்றாக அழிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துவிட்டது. காந்தியின் பெயரே அந்த திட்டத்தில் இருக்க கூடாது என முடிவு செய்துவிட்டது. காந்தியடிகளை சிறுமைபடுத்துவதில் குறியாக இருக்கின்றனர். காந்தியடிகளின் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். இதை கண்டித்து 24ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றது.

நாடு முழுவதும் சமஸ்கிருத மயமாக்குதல், இந்துத்துவ மயமாக்குதல், கார்ப்பரேட் மயமாக்குதல் ஆகியவற்றில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. சாதியவாதம், மதவாதம் போன்றவற்றை வைத்து இயங்குகின்றனர். தமிழகத்திலும் அவர்கள் குறி வைக்கின்றனர். திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை கண்டிக்கும் வகையில் 22ம் தேதி எனது தலைமையில் மதுரையில் போராட்டம் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் என்பவர் இறந்தது கவலை அளிக்கும் நிகழ்வு.

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். பாஜவின் மதவெறி அரசியலுக்கு இது முதல் களப்பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றனரோ என்ற கவலை மிஞ்சுகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்க போகின்றவர்கள் வெளிநாட்டை சேர்த்தவர்கள் அல்ல, நாட்டின் பூர்வீக குடிமக்கள் தான். தமிழகத்தில் 97 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு இருக்கின்றனர். வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயல்கின்றனர். இவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. பாஜ அரசு எல்லா விவகாரங்களையும் தான்தோன்றித்தனமாக அணுகுகிறது, இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: