விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு

ஈரோடு: விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் தவெக கூட்டணிக்கு வரலாம் என ஈரோட்டில் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் வருகிற 18ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால், முறையான அனுமதி பெறாததால் பிரசார கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தில் இன்று முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 18ம் தேதி காலை சரியாக 11 மணி முதல் 1 மணிக்குள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் சேர்ப்பது என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார். பெருந்துறையில் பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் வழங்கப்படவில்லை. காவல்துறைக்கு மட்டுமே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அறங்காவலர் மூலம் அந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘‘அதிமுகவில் நீங்கள் நீக்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கு என்ன நிலையில் உள்ளதே?’’ என்ற கேள்விக்கு, ‘‘அது தனியானது‌. அதற்கு இதற்கும் தொடர்பில்லை. நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். அதிமுகவில் உயர் மட்ட குழு வரை பதவியில் இருந்த என்னை நீக்க இயலாது. ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்து விளக்கம் தரவேண்டும். அன்புமணி விடுத்த அழைப்பு குறித்து தலைமை முடிவு செய்யும்’’ என்றார்.

Related Stories: