திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 6 பேரின் தண்டனை விவரங்களை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார், மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திலீப் மீது பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது, சாட்சியங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பலாத்கார வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதி ஹனி எம். வர்கீஸ் வழக்கை விசாரித்தார். 7 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த விசாரணையில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் 6 நபர்களான பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை 12ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில்குமார் மற்றும் சரத் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 6 பேரின் ஜாமீனும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளது. 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
