நேரு வாக்கு திருட்டு செய்தாரா? முதல் பிரதமர் தேர்வில் நடந்தது என்ன? அமித்ஷா கூறியது முழுப் பொய்; வீடியோ வெளியிட்டு காங். விளக்கம்

புதுடெல்லி: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மக்களவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,‘தேர்​தலில் வாக்கு திருட்டு நடை​பெறு​வ​தாக ராகுல் காந்​தி கூறுகிறார். ஆனால் நாடு சுதந்​திரம் அடைந்​த​போது முதல் பிரதமரை தேர்ந்​தெடுக்​கும்​போது​தான் முதல் முறை​யாக வாக்கு திருட்டு நடை​பெற்​றது. மாநில காங்​கிரஸ் தலை​வர்​களுக்கு தலா ஒரு வாக்​குரிமை வழங்​கப்​பட்​டது. அப்​போது, சர்​தார் வல்​லபாய் படேலுக்கு 28 வாக்​கு​களும் ஜவஹர்​லால் நேரு​வுக்கு 2 வாக்​கு​களும் கிடைத்​தன. ஆனால், நேரு பிரதம​ரா​னார். என்றார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அமித்ஷா குற்றச்சாட்டு பொய்யானது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கற்பனைக்கதை என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, முதல் பிரதமராக நேரு தேர்வு செய்யப்பட்ட போது நடந்தது என்ன என்பது குறித்து விளக்கமான வீடியோ வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபல எழுத்தாளர், முன்னாள் பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், இந்திய வரலாறு, அரசியல் பிரமுகர்கள் குறித்த புத்தகங்களை எழுதிய பியூஷ் பபேலே என்பவரின் வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

அதில் பியூஷ் பபேலே கூறியிருப்பதாவது: சர்தார் வல்லபாய் படேல் மக்களால் விரும்பப்பட்ட தலைவராக இருந்தபோதிலும், ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்கப்பட்டார் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டு முழுப் பொய். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கற்பனைக் கதை. இந்தக் பொய்யின்படி, 1946ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குத்தான் தேர்தல் நடந்தது. உண்மை என்னவென்றால், 1946ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெறவிருந்த தேர்தல் நடைபெறவே இல்லை. பாஜ-ஆர்.எஸ்.எஸ் கூறுவது போல் வாக்குப்பதிவு எதுவும் நடைபெறவில்லை.

இது பரப்பப்பட்ட ஒரு பொய். தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் நாட்டில் கலவரங்கள் காரணமாக நிலைமை மோசமாக இருந்தது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தது, பதற்றம் நிலவியது, சிம்லா பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது மவுலானா ஆசாத் காங்கிரஸ் தலைவராக இருந்தார். எனவே காங்கிரஸ் கட்சிக்கு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடக்கும் சூழ்நிலை அப்போது இல்லை. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தங்களின் பரிந்துரைகளை அனுப்பி இருந்தது உண்மை தான். அவற்றில் பெரும்பாலானவை படேலுக்கு ஆதரவாக இருந்ததும் உண்மை தான்.

ஆனால், அந்த காலக்கட்டத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் கருத்துக்கு சட்டப்பூர்வமான மதிப்பு இல்லை என்பதையும், அதன் அடிப்படையில் யாரையும் தலைவராக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நேருவும், படேலும் காங்கிரஸ் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டதும் கூட, மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பரிந்துரையின் பேரில் அல்ல. பெரும்பாலும் மகாத்மா காந்தியே கட்சித் தலைவராக வேண்டும் என்றுதான் பரிந்துரைகள் வரும். மகாத்மா காந்தி யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தலைவராவார் என்பது ஒரு மரபாக இருந்தது, அது 1946 ஆம் ஆண்டுக்கும் பொருந்தும்.

அதன்பின் நடந்த தலைவர் பதவிக்கு சர்தார் படேல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார், மற்றொருவரும் செய்திருந்தார். ஆனால் நேரு கடைசி நாள் வரை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் செயற்குழு கூடியபோது, ​​​​அந்தச் சூழ்நிலையில் நேருவை தலைவராக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நேருவே தனது வாரிசு என்று மகாத்மா காந்தி திரும்ப திரும்ப கூறியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே படேல் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார், படேலை எதிர்த்து தலைவர் பதவிக்கு மனு செய்து இருந்த மற்றொருவரான ஆச்சார்யா கிருபளானியும் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். அவர்களின் ஒப்புதலுடன் நேரு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்றார்.

Related Stories: