அழுத்தத்தில் இருந்தார், கைகள் நடுங்கின, தவறாக பேசினார் எனது எந்த கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசுகையில், அவருக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இதுபற்றி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது ராகுல்காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடந்த அந்த விவாதத்தில் அமித் ஷா தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. இதையெல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர் மனதளவில் அழுத்தத்தில் இருந்தார். அது நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது. அதை முழு நாடும் பார்த்தது. நான் கூறிய விஷயங்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அதுபற்றி நாங்கள் செய்தியாளர் சந்திப்பின்போது பகிரங்கமாகக் கூறினோம். எனது செய்தியாளர் சந்திப்புகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்போம் என்று அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். பதில் கிடைக்கவில்லை. உண்மை என்ன என்பது உங்களுக்குத் (பத்திரிகையாளர்களுக்கு) தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: