வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.9 லட்சம் 23 ஆண்டுக்கு பிறகு விதவைக்கு இழப்பீடு வழங்கியது ரயில்வே

புதுடெல்லி: பீகாரின் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் சன்யுக்தா தேவி. இவரது கணவர் விஜய் சிங் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 21ல் பாட்னா செல்வதற்காக பக்தியார்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துள்ளார். ரயில் புறப்பட்ட சமயத்தில் கடும் கூட்ட நெரிசலால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த விஜய் சிங் பரிதாபமாக இறந்தார். இதனால் தேவி இழப்பீடு கேட்டு ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகினார். ஆனால் விஜய் சிங் மனநலம் சரியில்லாதவர் எனக் கூறி தேவி 20 ஆண்டாக அலைக்கழிக்கப்பட்டார். தீர்ப்பாயத்திலும் பாட்னா உயர் நீதிமன்றத்திலும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

2023ல் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனநலம் சரியில்லாத நபர் எப்படி முறையாக டிக்கெட் வாங்கி பயணிப்பார் என கேள்வி கேட்டு, தேவிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க 2023 பிப்ரவரி 2ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக தேவியின் வழக்கறிஞர் காலமானதால் இந்த நீதிமன்ற உத்தரவு தேவிக்கு தெரியாமல் போனது. அவர் வேறு முகவரிக்கு வீடு மாறியதால், இழப்பீடு தர ரயில்வே நிர்வாகம் பல முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இறுதியில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேயின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தேவியின் வங்கி கணக்குக்கு வட்டியுடன் இழப்பீடு தொகை ரூ.8 லட்சத்து 92 ஆயிரத்து 953 கடந்த மாதம் 13ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் ரயில்வே நேற்று தெரிவித்தது. ‘‘ஏழையின் முகத்தில் சிரிப்பை காண்பதுதான் நாங்கள் சம்பாதிக்க விரும்புவது’’ என தலைமை நீதிபதி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

Related Stories: