கிருஷ்ணாநகர்: மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் சமீபத்தில் பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது தின்பண்ட வியாபாரிகள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். இந்நிலையில் நடியா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,\\\\” குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏழை தின்பண்ட வியாபாரிகளை தாக்கியுள்ளனர். ஏழைகளை துன்புறுத்துவதற்கு யாரையும் நான் விடமாட்டேன். நினைவில் கொள்ளுங்கள். பாஜ அசைவ உணவு உண்பதை அனுமதிக்காது. நீங்கள் அசைவம் சாப்பிட வேண்டுமா இல்லையா என்பது உங்கள் விருப்பம்.
ஆனால் பழங்குடியினர், சிறுபான்மையினர் அல்லது பட்டியல் இனத்தவரின் விஷயங்களில் யாரும் தலையிடுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். இது மேற்கு வங்கம். உத்தரப்பிரதேசம் இல்லை. இங்கு தடுப்பு முகாம்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை அத்தகைய முகாம் எதுவும் அமைப்பதற்கு அனுமதிக்கப்படாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆபத்தானவர். அதை நீங்கள் அவருடைய கண்களிலேயே பார்க்கலாம். அது பயங்கரமானது. ஒரு கண்ணில் துரியோதனையும், மற்றொரு கண்ணில் துச்சாதனனையும் பார்க்க முடிகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டாலும், நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.
* மே.வங்கம் தாமதம்
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான புதிய வாக்குச்சாவடிகளை தயார்படுத்தவும், ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையானது 1200ஐ கடக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து உயரமான கட்டிடங்கள், குடியிருப்பு சங்கங்கள் அல்லது தரை தளத்தில் பொது வசதிப் பகுதி உள்ளிட்ட இடங்களில் புதிய வாக்குச்சாவடிகளை அமைப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தி முன்மொழிவுகளை இறுதி செய்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் இந்த விவகாரத்தில் தாமதம் செய்வதாக தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் போதுமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
