புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு இரவு விருந்து அளித்தார். இதில் அனைவரும் கலந்து கொண்டனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றி சாதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் இரவு விருந்து அளித்தார். இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றாகப் பயணித்து, பேருந்துகளில் ஏறி, 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார்.
* சோனியா, ராகுல் மீது ஊழல் புகார்: மக்களவை முடங்கியது
சோனியா காந்தி, ராகுல் மீது பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் போராட்டத்தால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. காந்தி குடும்பத்தினர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்திற்கு அபகரித்துக்கொண்டனர் என்று நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டியதை தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் முடங்கியது.
* திரிணாமுல் எம்பி இ சிகரெட் புகைத்ததாக பா.ஜ புகார்
மக்களவையில் திரிணாமுல் எம்பி இ சிகரெட் புகைத்ததாக பா.ஜ எம்பி அனுராக் தாக்கூர் அவையில் புகார் தெரிவித்தார். அவர் பேசுகையில்,’ திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கடந்த பல நாட்களாக அவையில் தொடர்ந்து புகைத்து வருகிறார்’ என்றார். இதனால் பா.ஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவையின் கண்ணியத்தைக் காக்குமாறு உறுப்பினர்களை ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார். எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
