தின்சுகியா: அருணாச்சல பிரதேசத்தில் 1000 அடி பள்ளத்தாக்கில் டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் மாயமாகி உள்ளனர். அசாமின் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள், அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் விடுதி கட்டுமான பணிக்காக கடந்த 8ம் தேதி டிப்பர் லாரியில் அழைத்து வரப்பட்டனர். அப்போது லாரி ஹயுலியாங்க்-சாக்லகாம் சாலையில் சாக்லகாமில் இருந்து 12 கிமீ தொலைவில் வந்த போது, சாலை வளைவில் வழுக்கி 1000 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து ஆரம்பத்தில் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. யாரும் போலீசில் புகாரும் தரவில்லை. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புத்தேஸ்வர் தீப் என்ற ஒரே ஒரு தொழிலாளி பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி வந்து செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ராணுவம், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு மரங்கள் அடர்ந்த பகுதியில் டிப்பர் லாரி கிடப்பது கண்டறியப்பட்டது. 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
