புதுடெல்லி: சர்தார் படேலின் மகள் எழுதிய நாட்குறிப்பு நகலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் நேரில் வழங்கினார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, நேரு பிரதமராக இருந்த போது பாபர் மசூதியை கட்ட அரசு நிதியை பயன்படுத்த விரும்பினார். ஆனால் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அதனை உறுதியாக எதிர்த்து தடுத்து நிறுத்தினார் என்று கூறினார். இதற்கு ஆதாரமாக அப்போதைய பாஜ தலைவர்களின் பதிவுகளையும், வல்லபாய் படேலின் மகள் மணிபென் படேலின் நாட் குறிப்பு தகவல்களையும் அவர் சுட்டி காட்டினார். ஆனால் ராஜ்நாத்தின் இந்த கூற்றுக்கு காங்கிரஸ் கடுமையாக மறுப்பு தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இது வரலாற்றை திரிக்கும் முயற்சி.ராஜ்நாத் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் நாட்குறிப்பு பதிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நேரு எப்போதும், கோயில், மசூதி,தேவாலயம் ஆகியவற்றிற்கு அரசு பணம் செலவழிப்பதை எதிர்த்தார். ஐஐடி,ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கே அரசு நிதியை பயன்படுத்த விரும்பினார். பிரதமர் மோடியுடன் தன்னுடைய நெருக்கத்தை அதிகரிக்கவே ராஜ்நாத் இது போன்று பேசுகிறார் என்று கூறினார்.
இந்த நிலையில்,நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த ராஜ்நாத்திடம் மணி பென் நாட்குறிப்பு நகலை ஜெய்ராம் வழங்கி, இதை படியுங்கள் என்றார். அது குஜராத்தியில் எழுதப்பட்டிருந்தது. அப்போது ராஜ்நாத் கூறும் போது தனக்கு குஜராத்தி தெரியாது என்றார். அதை உங்களுக்காக கொண்டு வந்தேன் என்று ஜெய்ராம் கூறினார். ராஜ்நாத் கூறும் போது தன்னிடம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மணிபென்னின் நாட்குறிப்பு உள்ளது என்றார். மணிபென்னின் நாட்குறிப்பு நகலின் ஸ்க்ரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் பகிர்ந்துள்ளார்.
