திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். தற்போது தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 14ம் தேதி வரையிலும், மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 26, 27 ஆகிய தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் தலா 5 ஆயிரம் பேருக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்றுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும்.
