போட்டி நடத்த சென்னை உள்பட 5 நகரங்கள் தேர்வு; உலகக் கோப்பை டி20 பிப். 7ம் தேதி துவக்கம்

புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியா, பிப்.7ம் தேதி நடக்கும் தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடனும், பிப். 15ம் தேதி பாகிஸ்தானுடனும் மோதவுள்ளது.

உலகக் கோப்பை டி20 போட்டிகள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இப்போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகளும், குரூப் பி-யில் இலங்கை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி அணிகளும், குரூப் டி-யில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் மோதவுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். கடந்த 2024ல் நடந்த உலகக் கோப்பை டி20யில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2026 பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்தியா, அமெரிக்காவுடன் மோதுகிறது. பின்னர், பிப்.12ம் தேதி நமீபியா, பிப். 15ம் தேதி பாகிஸ்தான், பிப். 18ம் தேதி நெதர்லாந்து அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது. இந்த போட்டிகள் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் அணி மோதும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்.

பாகிஸ்தான் அரை இறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகள், புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், மும்பை நகரங்களிலும், இலங்கையில் கண்டி, கொழும்பு நகரங்களிலும் நடைபெற உள்ளன. சூப்பர் 8 போட்டிகள், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, கொழும்பு, கண்டி நகரங்களில் நடைபெறும். அரை இறுதிப் போட்டிகள், மும்பை, கொல்கத்தா, (பாகிஸ்தான் தகுதி பெற்றால்) கொழும்பு நகரங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பு நகரில் மார்ச் 8ம் தேதி நடைபெறும்.

இப்போட்டிகளின் தூதராக, கடந்த 2024ல் உலகக் கோப்பை டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories: