மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களின் 2025-26ம் ஆண்டிற்கான ஊதிய அமைப்பை திருத்தம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய அமைப்பானது ஏ பிளஸ், ஏ, பி, சி என தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏ பிளஸ் கிரேடில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடியும், ஏ கிரேட் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேட் மற்றும் சி கிரேட் வீரர்களுக்கு தலா ரூ.3 கோடி மற்றும் ரூ.1 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ பிளஸ் கிரேடில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் அங்கம் வகித்து வந்தனர்.
ரோகித் சர்மா மற்றும் கோஹ்லி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகலில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தனர். அதனால் இருவரின் ஊதிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு இருவரும் ஏ கிரேடிற்கு தரம் இறக்க செய்யப்பட்டனர். அதே போல் டி 20யில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோரும் ஏ கிரேடிற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஊதிய அளவில் தரம் இறக்கப்பட்ட பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஆண்டு வருமானமாக ரூ.5 கோடி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் இந்திய அணி டி20 உலககோப்பையை வெல்வதில் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்காற்றினார். மேலும் பும்ராவின் சமீபத்திய செயல்பாடு உலக கிரிக்கெட் அரங்கில் பாராட்டை பெற்று தந்துள்ளது. இதை தொடர்ந்து ஏ கிரேடிற்கு மாற்றம் செய்யப்பட்டதால் பும்ராவிற்கு ஏற்பட்ட ரூ.2 கோடி இழப்பீட்டை ஈடுகட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான ஊதிய அமைப்பு திருத்தத்தில் ஏ பிளஸ் கிரேட் நீக்கப்பட உள்ள நிலையில், பும்ராவிற்கான ஊதியத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
மேலும் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் அக்சர் பட்டேலின் ஊதிய தரமும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சி கிரேடில் உள்ள அக்சர் பட்டேல் ஆண்டு வருமானமாக ரூ.1 கோடி பெற்று வரும் நிலையில், நடப்பாண்டிற்கான ஊதிய அமைப்பு திருத்தத்தில் அக்சர் பட்டேல் பி கிரேடிற்கு மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.
